யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 65 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், இன்றுடன் (10) அகழ்வு பணிகள் 15வது நாளை எட்டியுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மதியத்துடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இன்றையதின அகழ்வில் புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பை, காலணிகள், கண்ணாடி வளையல்கள், ஆடையை ஒத்த துணிகள், பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
