O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு- 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!

2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.

2024 சாதாரண தரப் பரீட்சை கடந்த 2025 மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடு முழுவதும் 3,664 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

இதில் 474,147 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாவர்.

இந்த நிலையில் வெளியாகிய சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.

அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்.

இதேவேளை பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் தேவைப்பட்டால் பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 க்கு அழைப்பதன் மூலமோ, அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் தொலைபேசி இலக்கங்களான 0112-785922, 0112-784208, 0112-786616 மற்றும் 0112-784537 ஆகியவற்றின் மூலமோ விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

இதற்கிடையில், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அந்தந்தப் பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகள் பட்டியலைப் பதிவிறக்கி அச்சிடப்பட்ட பிரதியைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல் அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள் பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறு பட்டியலைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்வையிடவோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வாறு பெறப்படும் அச்சிடப்பட்ட பெபெறுபேறுகள் பட்டியல், உயர்தர வகுப்புகளுக்கு சேருவதற்கு செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அச்சிடப்பட்ட பெறுபேறுகள் பட்டியல் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பட்டியல் அந்த விண்ணப்பதாரர்களுக்கும் மீள் மதிப்பீட்டிற்குப் பின்னர் வழங்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பரீட்சைச் சான்றிதழ்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply