மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் (10) பக்திபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம் நாளான நேற்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.
1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மயிலிட்டி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டது.
மயிலிட்டி பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தமையால் ஆலயம் சேதமடைந்ததுடன், ஆலயத்தின் சித்திர தேரும் முற்றாக அழிவடைந்தது.
யுத்தம் நிறைவடைந்து பின்னரான காலப் பகுதியில் மயிலிட்டி பகுதிக்கு மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆலயத்தை மக்கள் தமது நிதி பங்களிப்பில் புனரமைத்தனர்.
அத்துடன் மக்களின் நிதி பங்களிப்பில் ஆலயத்திற்காக சித்திர தேரும் உருவாக்கப்பட்டு, கடந்த ஜூலை 07ஆம் திகதி சித்திர தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.
இந்த நிலையில், நேற்றைய தினம் மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் புதிய சித்திர தேர் ஏறி அடியவர்களுக்கு அருள்பாலித்திருந்தார்.
