பிரித்தானியாவின் தீர்வை வரியின்றிய புதிய சீர்திருத்தம்- இலங்கைக்கு கிடைக்கும் நன்மை!

இலங்கை, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களை தீர்வை வரியின்றி இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதாக பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்த புதிய வர்த்தக நடவடிக்கைகள் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பயனளிக்கும் எனவும், அவர்கள் சந்தையை எளிதாக அணுக முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆடைத் தொழில் ஏற்றுமதி வருமானம் முக்கியமாக உள்ளதுடன், இது ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது.

இதற்கிடையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 30 வீத பரஸ்பர வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே 88 சதவீத வர்த்தக பற்றாக்குறை காரணமாக இலங்கை மீது 44 சதவீத வரியை விதிப்பதாக கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி ஜனாதிபதி டிரம்ப் முதலில் அறிவித்த போதிலும், நேற்று இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில் ஜனாதிபதி டிரம்ப் அந்த எண்ணிக்கையை 30 சதவீதமாகக் குறைத்தார்.

இந்த கட்டண விகிதத்தை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக நேற்று விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் தெரிவித்தனர்.

இருப்பினும், அமெரிக்காவால் புதிதாக விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர வரிக்கு கூடுதலாக, தற்போதுள்ள 10 சதவீத வரியும் சேர்க்கப்பட உள்ளது.

இந்த வரிவிதிப்பு இலங்கையில் ஆடை உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் 25 வீதம் அமெரிக்காவிலிருந்து கிடைப்பதாகவும், நாட்டின் ஆடைப் பொருட்களில் 70 வீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை மீது அமெரிக்கா விதித்த 40% வரி நாட்டின் ஏற்றுமதித் துறையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை விரிவுரையாளர் உமேஷ் மொரமுதலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில்,

ஆடைகளைப் பொறுத்தவரை, நாங்கள் வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டியிடுகிறோம்.

இந்த நாடுகளில் ஊதிய நிலை இலங்கையின் விலைகளை விடக் குறைவாக உள்ளது. சில நேரங்களில், நமது விலை உயர்வை பங்களாதேஷ் உடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளை விட விலைக் குறைப்பின் சதவீதம் மிக அதிகமாக இருக்கும்.

இதனால்தான் இலங்கை தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களை பல்வகைப்படுத்த வேண்டும். ஏற்றுமதி செய்யும் நாடுகளையும் பல்வகைப்படுத்த வேண்டும்- எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் பிரித்தானியா வரியின்றி அந்நாட்டு சந்தைக்குள் நுழையும் வகையில் புதிய வர்த்தக நடவடிக்கைகளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply