வவுனியாவில் பொலிஸாரின் அடாவடி- பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்ப்படுத்திய காரணத்தால் குறித்த நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் நேற்று இரவு10 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் அப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை குறித்த பொலிஸார் துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் கோபமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

பொலிஸாரின் அடாவடியான இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்தும் வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் என்றும், வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் எனவும் தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாருக்கும், இளைஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இளைஞர்களின் செயற்பாட்டினால் தடுமாறிய பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் குழப்பமடைந்தனர்.

இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை என்றும், நீதிபதி இங்கு வரவேண்டும் எனவும் விடாப்பிடியாக நின்றனர் . இதனால் குறித்த பகுதியில் கலவரம் ஒன்று ஏற்ப்படுவதற்கான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.

இதனையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட பொதுமக்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர், கலகதடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply