வவுனியா, கூமாங்குளம் பகுதி விபத்து விவகாரம்- வெளியான தகவல்கள்!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்திய காரணத்தால் குறித்த நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றது.

இந்த சம்பவத்தின் போது அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவர் தகவல் வழங்கியுள்ளார்.

அதன்படி நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

எனினும், அவ்வாறு நடந்திருந்தால் சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன.

பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (12) மேற்கொள்ளப்படஉள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply