வடக்கில் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்றையதினம் (15) அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தை யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கைச் சேர்ந்த பொது மக்கள் முன்னெடுத்ததுடன், வடக்கு மக்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் இனி ஒருபோதும் வரப்போவதில்லை என கூறும் படையினரிடம், அதி உயர் பாதுகாப்பு வலையங்களை ஏன் வைத்திருக்கின்றீர்கள் என்பதற்கு பதிலில்லை.
வடக்கில் உள்ள பொது மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், அங்குள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்நிலையிலேயே இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம்- எனத் தெரிவித்திருந்தார்.



