புதிய அரசியலமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது- நளிந்த ஜயதிஸ்ஸ!

புதிய அரசியலமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வழங்கிய 22 உறுதிமொழிகளில் இதுவரை ஒன்றுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே, வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் என நம்ப முடியுமா?
புதிய அரசியலமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றியும் அவதானம் செலுத்தப்படுமா? என்று எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கினோம். அவற்றில் சிலவற்றை தேர்வு செய்து, அதில் இத்தனைதான் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறுவது அநீதியாகும்.

நாம் வழங்கிய மொத்த உறுதிமொழிகளை ஒப்பிட்டு, அவற்றுள் நிறைவேற்றப்பட்டுள்ளவை எவை என்றே பார்க்க வேண்டும். இலக்கம் முக்கியம் அல்ல. எமது பயணம் எதை நோக்கி எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது என்பதே முக்கியம்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பிரகாரம் நாம் செயற்பட்டு வருகின்றோம். இது மக்களுக்கும் தெரியும். அதேபோல உறுதிமொழிகளை மீறி பயணிப்போமானால் அதற்கு எதிராக மக்கள் குரல் கொடுப்பார்கள்.

புதிய அரசியலமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. தேர்தல் முறை மாற்றம் உட்பட பல மாற்றங்கள் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெறும். சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அங்கீகரித்தால் புதிய அரசியலமைப்பு அமுலுக்கு வரும் – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply