யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பிரதேச சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார்.
குறித்த தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வன்னியசிங்கம் பிரபாகரன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சட்டவிரோத விகாரை தொடர்பிலான வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக வேண்டும் என தவிசாளரிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார்.
இதற்கு தவிசாளர் பதிலளிக்கையில், குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இலவசமாகவே செய்வார் என சபையில் வாக்குறுதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
