தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
அவர்களை யாழ். பல்கலை மருத்துவ பீட மாணவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் (19) இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்யும் நோக்கில் நிதி திரட்டும் விதமாக, யாழ். பல்கலை மருத்துவ பீட மாணவர்களினால் குறித்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி ஒரு களியாட்ட நிகழ்வாக இல்லாமல், மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் மருத்துவ சமூகத்தை மேம்படுத்தும் நிகழ்வாக அமையும் என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் பாடகர் ஸ்ரீநிவாஸ், ஜீவன், சரண்யா ஸ்ரீநிவாஸ், ஈழத்து பாடகி கில்மிசா, அக்சயா ஆகியோர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
