வவுனியா, கூமாங்குளம் பகுதி விபத்து விவகாரம்- மேலும் 5 பேர் கைது!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த ஜூலை 11ஆம் திகதி இரவு நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்திய காரணத்தால் குறித்த நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்திருந்தார்.

இதன்போது போக்குவரத்து பொலிஸாரே மரணத்திற்கு காரணம் என குறித்த பகுதி மக்கள் தெரிவித்து குழப்பத்தில் ஈடுபட்டதுடன், மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல் நடாத்தினர்.

இதில் 5 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் ஒரு கெப் ரக வாகனம் சேதப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்றுகூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை மற்றும் இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் 5 பேர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply