தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை குறிவைத்து நேற்றையதினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றிருந்தனர்.
இதன்போது வெள்ளவத்தையைச் சேர்ந்த 46 வயதுடைய சுதத் குமார் என்பவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் இருப்பதை அவதானித்த பொலிஸ் விசேட படையின் புலனாய்வு அதிகாரி ஒருவர், மூத்த பொலிஸ் அதிகாரிக்கு தகவல் அளித்ததாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்த ஆரம்பகட்ட விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் இணைக்கப்பட்டிருந்த இலக்கத் தகடு ஒரு காருக்கு பதிவு செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.
கொழும்பு கைரேகைத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார்.
சிசிடிவி காட்சிகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் எந்த இடையூறும் இல்லாமல் நடந்து சென்று, காரின் சாரதி இருக்கையில் இருந்த சுதத் குமார் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டார்.
இதன் போது இரண்டு குண்டுகள் அவரது தோள்பட்டை மற்றும் வயிற்றில் பட்டன. மற்றவை காரைத் தாக்கின. தாக்குதலுக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஒருவர், காயமடைந்த சுதத் குமாரை அதே காரில் ஏற்றி களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்தார்.
சுதத் குமார் நாளாந்த கடன் வழங்குபவர் எனவும், அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை எனவும், யாராலும் அச்சுறுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில், சுதத் குமார், “வெலே சுதா” என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உறவினரை மணந்து, சமீபத்தில் விவாகரத்து செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர் படோவிட்ட அசங்கவின் நெருங்கிய உறவினர் எனவும், கொஸ் மல்லியின் தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுராத ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
