ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடன்வல ஸ்வர்ண வாலுகாராம விகாரையில் நடைபெறவுள்ள வருடாந்திர எசல பெரஹெர விழாவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
யடன்வல ஸ்வர்ண வாலுகாராம விகாரையில் வருடாந்திர எசல பெரஹெர இன்று (19) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது.
குறித்த பெரஹெர ஊர்வலம் ஸ்வர்ண வாலுகாராம விகாரைக்கு அருகிலிருந்து ஆரம்பமாகி, கரவனெல்லயிலிருந்து கேகாலை கரவனெல்ல வீதி வழியாக ருவான்வெல்ல ராஜசிங்க கல்லூரிக்கு அருகில் வரை சென்று, மீண்டும் அவ்வீதி ஊடாக ஸ்வர்ண வாலுகாராம விகாரைக்கு வருகைதர திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த காலப்பகுதிக்குள் இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் பின்வரும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கேகாலையில் இருந்து அவிசாவளை நோக்கி வரும் வாகனங்கள், வராவல சந்தியிலிருந்து புலத்கொஹுபிட்டிய நோக்கி திரும்பி, பருஸ்ஸெல்ல-யடியந்தோட்டை வீதி வழியாக பயணித்து, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிக்குள் நுழைந்து அவிசாவளை நோக்கி பயணிக்க முடியும்.
அவிசாவளையிலிருந்து கேகாலை நோக்கி வரும் வாகனங்கள் தல்துவ சந்தியில் இடதுபுறம் திரும்பி அமிதிரிகல வீதி வழியாக பயணித்து, மகாதெனிய வழியாக கோனகல்தெனிய-நிட்டம்புவ வீதியில் நுழைந்து, ருவான்வெல்ல மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இடதுபுறம் திரும்பி கேகாலை நோக்கி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரஹெர நிகழ்வு இடம்பெறும் காலப்பகுதிக்குள் நள்ளிரவு 12 மணி வரை வராவல சந்தி மற்றும் தல்துவ சந்தியில் இருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
