பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்திய நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதனை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு கடந்த ஏப்ரல் மாதம் சபாநாயகரால் நியமிக்கப்பட்டது.
இதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மூவரடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புக்குழுவின் இணை உறுப்பினர்களாக நீதியரசர் (ஒய்வுநிலை) எம்.என்.பி.இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.
இந்த விசாரணைக் குழு 10 தடவைகளுக்கு மேல் கூடி, சாட்சியங்களைச் சேகரித்ததுடன், 2025 ஜூலை 16 முதல் தினமும் கூடி சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது.
சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணி விரைந்து மேற்கொள்ளப்பட்டதன்படி, விசாரணைக் குழுவின் சாட்சியப் பதிவு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி குழுவின் அறிக்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
