தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டில் குறிப்பிட்டதொரு வேலையாட்களுக்கு குறைந்தபட்ச வேதனம் டிசம்பர் முதல் 21,000 ரூபா முதல் 27,000 ரூபா வரையிலும், ஜனவரி மாதம் முதல் 30,000 ஆக அதிகரிக்கப்படும் போது, மலையகம் பெருந்தோட்ட தாழ்நில சிறு தோட்ட சமூகத்தை மறந்துவிட்டனர். தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், தென்னம் தோட்டங்கள் மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்களில் ஈடுபட்டுள்ளவர்களும் காணப்படுகின்றனர்.
முறையான கணக்கெடுப்புக்கு ஏற்ப, அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் மிகக் குறைந்த அளவை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது. தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நாம் அறிய விரும்புகிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இராதா கிருஷ்ணன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை சம்பளம் 1,700 ரூபா என்ற வாக்குறுதியை செயற்படுத்தும் திருத்தம் ஒன்றை முன்வைப்பதனால், இதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
