நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (22) மாலை இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில் அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அங்கு சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்து சந்தேகநபர் கொலை செய்துள்ளார்.
இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
