இரத்தினபுரி பொலிஸ் தலைமையக அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்!

இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றையதினம் (30) குறித்த சந்தேகநபர் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அப்போது சிறைக் கதவு திறக்கப்பட்ட போது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் தப்பிச் சென்ற காரணத்தினால் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும், சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், சமீபத்தில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடையவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply