மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.
மகிழவெட்டுவானைச் சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்று இரவு 7.00 மணியளவில், குறித்த பெண் தனது வீட்டு முற்றத்தில் மூன்று வயது பெண் குழந்தையுடன் இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த யானை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.
இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தை மீட்கப்பட்டதுடன், உயிரிழந்த தாயின் சடலத்தையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
