“ஹரக் கட்டா” உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு எதிராக புதிய வழக்கு தாக்கல்!

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் “ஹரக் கட்டா” உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு எதிராக, சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த போது தப்பிக்க சதி செய்தமை உள்ளிட்ட 50 குற்றசாட்டுகளை முன்வைத்து, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் கான்ஸ்டபிள் ரவிந்து சந்திப குணசேகர, தினேஷ் தரங்க, ருவான் சாமர மிதிகம ருவன் மற்றும் சஞ்சீவ அபேசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்

இந்த வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்ட பின்னர், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி “ஹரக் கட்டா”வின் தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான பின்னர், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏனைய நான்கு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் வழக்கை செப்டம்பர் 24ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply