இலங்கை பாடகர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!

ஒரு பாடலின் முழுமையான உரிமைகளை பாடகர்களுக்கும் வழங்கும்படி சட்டங்களைத் திருத்துமாறு பாடகர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போதே இலங்கை பாடகர்கள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கையை விடுத்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது,

ஒரு பாடலின் முழுமையான மற்றும் சட்டபூர்வ உரிமைகளை பாடலாசிரியருக்கு, இசையமைப்பாளர்களுக்கும்வழங்குவது போல் பாடகர்களுக்கும் வழங்க சட்டங்களைத் திருத்துமாறு பாடகர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது.

புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு பாடலுக்கு முழுமையான உரிமையை பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் கொண்டிருப்பதால், பல பிரபல பாடகர்கள் நெருக்கடியில் உள்ளனர் என்றும் தங்களின் சமூக ஊடகங்களில் பாடல்களைப் பதிவேற்ற முடியாமல் இருப்பதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதனால் தொழில் ரீதியாக இசைத் துறையில் ஈடுபட்டுள்ள பல ஆண் மற்றும் பெண் பாடகர்கள் அநீதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் பரிசீலித்து தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்வதற்கு ஒரு சுயாதீனக் குழுவை நியமிக்குமாறு பாடகர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது.

இதன்போது ஜனாதிபதி, குறித்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எனவே இது தொடர்பில் ஆராய்ந்து தற்போதுள்ள சர்வதேச சட்டம் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் நிறுவப்பட்டுள்ள மரபுகளை ஆராய்ந்தும், அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் தீர்வுக்கான அணுகுமுறை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply