யாழ். செம்மணியில் மீட்கப்பட்ட சிசுவின் எலும்பு கூட்டு தொகுதி!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். செம்மணி பகுதியில் அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு மேலதிகமாக புதைகுழிகள் இருக்கின்றனவா என்று அறிவதற்காக தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் (ஜி.பி. ஆர்.) ஸ்கான் செய்யும் நடவடிக்கைகள் இரண்டு தினங்கள் நடைபெற்றன.

குறித்த பணிகள் கடந்த செவ்வாய்கிழமையுடன் (05) முடிவுக்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றைய தினம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். செம்மணியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (07) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply