கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரை பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் வடக்கைச் சேர்ந்த 21 வயதுடைய ஜெயராஜ் சுபராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
நேற்று முன்தினம் (07) இரவு தொழிலுக்காகச் சென்ற இளைஞன், நேற்று (08) அதிகாலை மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 2:30 மணியளவில் தொழிலுக்காக வந்த மற்றொரு நபர், குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதால் யானை தாக்கியிருக்கலாம் என சந்தேகித்து இளைஞனின் தந்தையையும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரையும் அழைத்து வந்து பார்த்தபோது, உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்தனர்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு, மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரிக்கவும், கைரேகை பரிசோதனை மேற்கொள்ளவும், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பொலிஸார் மற்றும் தடயவியல் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இளைஞனின் மாமனார் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
