அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த நிலையில், அதனை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
மருத்துவ சேவை மற்றும் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை காரணமாக ஏராளமான கிராமப்புற மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவது சவாலாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தங்களது கோரிக்கைக்கு கிடைத்த ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு, சங்கத்தின் நிர்வாக குழுவில் பணிப்புறக்கணிப்பை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
