இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் நேற்றைய விசேட ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 61 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் 61 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 09 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கைதானவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் விடுதலை தாமதமாகும் பட்சத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி கண்டன போராட்டமும், இந்திய சுதந்திரதினமான 15ஆம் திகதி அன்று உணவு தவிர்ப்பு போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 20,000 மேற்பட்ட மீனவர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத காரணத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் வக்கியுறுத்துகின்றனர்.
