அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு- இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள வோல்கர் டர்க்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வு அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” குறித்த தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் சமர்ப்பிக்க உள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் செப்டம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒக்டோபர் 08ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் தொடக்க நாளில் ஆணையர் வோல்கர் டர்க் ‘இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை’ என்ற தலைப்பில் இலங்கை குறித்த தனது அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் ஜூன் மாதம் இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை பற்றிய தனது அவதானிப்புகளை அறிக்கையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி தளத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயம் தொடர்பான தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் முக்கியமாக இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா மற்றும் கனடா திட்டமிட்டுள்ளன.

இதேவேளை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் UNHRC அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு மேலும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply