வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருந்த நிலையில், திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி அன்று ஹர்த்தால் தினமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் அனுட்டிப்புக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மடுமாதா தேவாலயத்தில் அன்றைய தினம் விசேட நிகழ்வு நடக்க இருப்பதால் அந்தத் திகதியை வேறொரு திகதிக்கு மாற்றுமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நேற்று மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வருடன் நடாத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் இந்தத் திகதியை மாற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது.
இந்த மாற்றம் சம்பந்தமாக நல்லூர் கோவில் திருவிழா நிகழ்வுகளையும் அனுசரித்து எதிர்வரும் திங்கள் கிழமை 18ஆம் திகதிக்கு ஹர்த்தால் அனுட்டிப்பை மாற்றுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு வடக்கு – கிழக்கு முழுவதையும் முடக்கி எமது எதிர்ப்பை பாரிய அளவில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்- என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
