இலங்கை நாடாளுமன்றத்தில் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைவாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலின்படி இலங்கை நாடாளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாடாளுமன்ற கட்டடத்தொகுதியின் கொன்கிரீட் மேல்தளம் (Roof Terrace) மீது காணப்படும் மண் அகற்றப்பட்டு, திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது மாத்திரமன்றி, கூரைகளின் பீலிகள் (Roof Gutters), செப்புக் கதவு (Copper Door), நாடாளுமன்ற வைத்திய நிலையம் (Parliament Medical Center), கழிவறைக் கட்டமைப்பு (Washrooms) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி அறை என்பவற்றிலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு அளவிலான திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்புக்கள் இணைப்புப் பொறியியல் திணைக்களத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருப்பினும், பாரிய அளவிலான திருத்த வேலைகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




