ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமித்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் வயல் நிலம் இந்திய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுவதை நிறுத்த கோரியும், வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பை தெரிவித்தும் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், ஜன அரகலய இயக்கத்துடன் இணைந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போராட்டத்தின் போது மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே மூத்த பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
இதனால் ஜனாதிபதி செயலகத்தின் ஒரு நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

