வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் இன்றையதினம் (18) ஹர்த்தால் தினமாக இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக உள்ளது.
அண்மையில் நடந்த புதுக்குடிக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதிகோரி வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், அதற்கு சமமாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் இன்று வழமை போல இயங்குவதை அவதானிக்க முடிந்தது.
வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கபட்டுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
அரசாங்கத்தையும், பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பேசப்படும் பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
மற்றும் இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு- கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனவே இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு பொது மக்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
