தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் நேற்று (17) மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தபால் ஊழியர்கள் வலியுறுத்தும் பிரதான கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
3,000 உப தபால் நிலையங்கள் உள்ளன. அவை வேலைநிறுத்தத்தில் இல்லை.
இருப்பினும், தபால் பொருட்களை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். தபால்மா அதிபர் என்ற முறையில் ஏற்பட்ட சிரமத்திற்கு இந்த நேரத்தில் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணிக்கு வரத் தயாராக உள்ளவர்கள் உள்ளனர்.
எனினும் அச்சுறுத்தல்கள் உள்ளன. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
இதுபோன்ற நாசவேலை செயல்கள் நடந்தால், நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
IT தளங்கள் சீர்குலைந்துள்ளன. அவற்றை அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.
அப்படி நடந்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
