தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும், இன்று தங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தபால் ஊழியர்கள் வலியுறுத்தும் பிரதான கோரிக்கைகள் ஏற்க முடியாதவை எனவும், பால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தை கைவிட்டு கலந்துரையாடல் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு தபால் தொழிற்சங்கங்களை கேட்டுக்கொள்வதாகவும் ருவன் சத்குமார மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
