வீரமுனையில் பெயர்பலகை இடும் செயற்பாட்டை தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்!

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்த நிலையில், அதனை சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அம்பாறை-கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்தது.

எனினும் அங்குவந்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

அங்குவந்த சம்மாந்துறை பொலிஸாரும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சாதகமான முறையில் செயற்பட்டதாக வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியில் பெயர்பலகை நடுவதற்கு பிரதேசசபையிடம் எந்த அனுமதியும் பெறத்தேவையில்லாத நிலையில், இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பிரதேச மக்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதனை போலியான காரணங்கள் கூறி தடுத்தவர்கள் மீண்டும் அதேவேலையினை செய்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதேசசபையில் உள்ள சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வீரமுனையின் அடையாளத்தினை இல்லாமல்செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் இது கண்டனத்திற்குரியது எனவும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply