கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவி ஆகிய இருவரும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது வழக்கு ஒன்றிற்காக குறித்த அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில், தன்னிடம் இலஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கடந்த மாதம் முறைப்பாடளித்துள்ளார்.
அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்றையதினம், மருதமுனை பகுதியில் இயங்கி வந்த காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு அருகில் மாறுவேடத்தில் காத்திருந்துள்ளனர்.
இதன்போது முறைப்பாட்டினை வழங்கிய பெண், ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியிடம் சென்று குறித்த இலஞ்ச பணத்தை தருவதாக கூறி ரூபா 300 ரூபாவை நீதிபதியின் மனைவியிடம் வழங்கியுள்ளார்.
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்ததுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
