தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (21) நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த விடயம் தொடர்பில் அமைச்சருடன் முறையான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்திருந்தார்.
அத்துடன் வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா, கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்புக்கான காரணம் என தெரிவித்தார்.
இந்தநிலையில், நேற்றையதினம் தபால் ஊழியர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் கருத்து தெரிவிக்கையில்,
எங்களது சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்கக் கோரியுள்ளோம். சைக்கிள்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம்.
அத்துடன், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம்.
ஆனால், அதிகாரிகளும், அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள்.
சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்- எனத் தெரிவித்திருந்தார்.
நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதனால் தபால் சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் நேற்றையதினம் (20) குறித்த விடயம் தொடர்பில் அமைச்சருடன் முறையான கலந்துரையாட வாய்ப்பு வழங்காத காரணத்தால் தபால் ஊழியர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
