தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்குரிய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்கும் நோக்கோடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு வடக்குக் கிழக்கில் இருந்து மற்றொரு விரிவான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இமானுவல், மன்னார் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், அர்ச்சுனா ராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான மட்டக்களப்பை சேர்ந்த சீலன் சிவயோகநாதன், திருகோணமலையை சேர்ந்த சிறி ஞானேஸ்வரன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் உள்ளிட்ட 38 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அனுப்பிய ஆணையாளருக்கு நன்றி தெரிவித்ததுடன் தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்கு உரிய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சீலன் விளக்கமளித்துள்ளார்.
சிறி ஞானேஸ்வரன், அரியநேந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தனர்.
இலங்கை அரசாங்கம் காலத்துக்கு காலம் ஏமாற்றுவதாகவும், ஜெனீவா தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைவதாகவும் ஆனாலும் இதுவரை எந்த ஒரு பரிந்துரைகளும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன அழிப்புக்கான சர்வதேச விசாசரணை மாத்திரமே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்ட கடிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் பற்றியும் வடக்குக் – கிழக்கில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறிஞானேசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
