ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தின் விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், அந்த சரத்தை சவாலுக்கு உட்படுத்தியும், உயர் நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த பத்திரண, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி எஸ்.எம். விஜேவிக்ரம ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சட்டமா அதிபர் இந்த மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் 01 முதல் 04 வரையான சரத்துக்கள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
மேலும், குறித்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சரத்துக்கள் ஒன்றுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகள் நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இறையாண்மை மற்றும் மக்களின் இறையாண்மையை மீறுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சரத்துக்கள் ஒட்டுமொத்த அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகவும், சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், இதன் ஊடாக அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள 1, 3, 4 பிரிவுகள் மற்றும் 12(1) பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த சட்டமூலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்ற, அது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வசன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா மற்றும் இரண்டு நபர்களால் குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஏற்கனவே மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
