வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
நல்லூர் ஆலய தேர்த் திருவிழா நேற்றையதினம் (21) இடம்பெற்ற வேளையில் குறித்த பெண் பக்தர்களிடையே சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடியதை அவதானித்த சாரணர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்ட வேளையில் சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் குறித்த பெண்ணை அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது,
குறித்த பெண் கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்பது தெரிய வந்தது.
அத்துடன் குறித்த பெண்ணுடன் மேலும் சிலர் ஆலயத்திற்கு வந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவருடன் வந்த ஏனைய நபர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பெண்ணின் நடவடிக்கைகளை அவதானித்து மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கு, பொலிஸார் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் தேர்த் திருவிழாவின் போது தமது தங்க நகைகள் திருடப்பட்டதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
