தபால் தொழிற்சங்கத்தினர் சந்தியாகிரகப் போராட்டம்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (22) ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தபால் தொழிற்சங்கத்தினர் சந்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சந்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தியாகிரகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் அமைச்சர் பங்கேற்க மறுப்பதாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றில் மீண்டும் வலியுறுத்தினார்.

நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பித்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதனால் தபால் சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply