பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில்- அமைச்சர் விஜித ஹேரத்!

செப்டம்பர் ஆரம்ப பகுதிக்குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் இன்று (22) பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தும் வரை அல்லாமல், எமது கொள்கை பிரகடனத்தில் கூறியதைப் போன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அது தொடர்பில் ஆராய அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலப்பகுதியில் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூடியிருந்தது.

திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இந்த மாதத்திற்கு இறுதி செய்யப்பட்டு, செப்டம்பர் ஆரம்ப பகுதிக்குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது அமுலில் உள்ளது. அந்த சட்டத்தின் ஊடாக இனம், மதம் என்ற அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மாறாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

அந்த சட்டத்தை திருத்தம் செய்ய மற்றும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கு புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply