வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை நிறுத்துமாறு கோரி ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும், விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூறக் கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தியே குமணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



