முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (22) பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கடந்த ஜூன் 24ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் வழங்கிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
