இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி- முழுமையான பார்வை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்தமை, இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவமாக பதிவாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று (22) காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி இருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கடந்த ஜூன் 24ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் வழங்கிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதவான் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்ததில், இந்த வழக்கின் அடிப்படையான பிரச்சினைக்குரிய பயணம் ஒரு தனிப்பட்ட பயணம் என்று தெரிகிறது என்று கூறினார்.

சந்தேகநபர் இந்த பயணத்திற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதை சந்தேகநபரின் சட்டத்தரணிகள் மறுக்கவில்லை என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும்போது அசாதாரண சூழ்நிலைகள் வெளிப்படும்போது மட்டுமே பிணை வழங்க முடியும் என்றும், ஆனால் சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் அசாதாரண சூழ்நிலைகளை வெளிப்படுத்தாததால், அவருக்கு பிணை வழங்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்த நீதவான், அவரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு சிறையில் தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களும் கூடியதால் இவ்வாறு பதற்றமான சூழல் எற்பட்டது.

இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு கலகமடக்கும் படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏற்றிக் கொண்டு சிறைச்சாலை பேருந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்தார்.

இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நலன் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சிறைச்சாலைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதிவாகியுள்ளார்.

இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என பலர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.

தற்போது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கு முதல் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.

ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எந்தவொரு அரசாங்கமும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க முற்பட்டதில்லை.

ஆனால் முதல் முறையாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் கடந்தகால அரசாங்கங்களின் ஊழல், மோசடிகள் மற்றும் அரச நிதியை வீண் விரயம் செய்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply