முன்னாள் ஜனாதிபதி உடல்நிலை தொடர்பில் அவதானம்- வைத்தியசாலையில் உயர்மட்ட பாதுகாப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தால் அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில் வைத்தியசாலை வளாகத்திற்குள் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏழு சிறைக்காவலர்கள் மற்றும் நான்கு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க உறுதிப்படுத்தினார்.

அவரது உடல்நிலை தொடர்பில் சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை வழமைக்கு கொண்டு வரும் பொருட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புக் குழு ஒன்று ஈடுபட்டுள்ளதாகத் தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா தெரிவித்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்று வந்துள்ளனர்.

தனியார் வெளிநாட்டுப் பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபாய் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply