கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலைக்கு முன்னேறியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் இயக்குநர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர கண்காணிப்பில் உள்ள விக்ரமசிங்கவை, சிறப்பு வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு நாளை (26) மீண்டும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தகுதியானவரா என்பது குறித்து இன்று மாலை இடம்பெறும் கலந்துரையாடலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் இயக்குநர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
