முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்றையதினம் அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ரணில் ஆதரவாளர்களால் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது ‘அநுர கோ ஹோம்’ என்ற கூச்சல்களோடு அங்கு ஒன்று திரண்டுள்ளவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினரும் கொழும்பில் ஒன்று திரண்டு எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பெலவத்த ஜேவிபியின் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி, பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனினும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
இதற்கிடையில், பொலிஸ் நீர்த்தாரை வாகனங்கள், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது நடாத்திய தாக்குதலின் போது அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

