‘தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்’- முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்!

‘தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்’ என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம் (26) ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அந்த நாளை நினைவு கூர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து செம்மணி வரையும், கிழக்கில் கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரையும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டம் தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள். ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், பொதுமக்களையும் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி சர்வதேச நீதியூடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்க வழி சேர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply