முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகஸ்ட் 06 ஆம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, மகாவலி அதிகார சபையின் நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகம் ‘அரகலய’ போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்டதாக கூறி இழப்பீடாக ரூ.88.5 இலட்சத்தை சட்டவிரோதமாகப் பெற்று, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

வழக்கின் அடுத்த விசாரணை 2025 ஓகஸ்ட் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply