இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு ஆறு கோடி இந்திய ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வேம்பார் சோதனை சாவடியில் மரைன் பொலிஸார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அதிவேகமாக சென்ற சிறிய லொறியொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனை செய்த வேளையில், 32 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் இந்த சிகரெட் பைக்கட் மூட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடந்த இருந்தமை தெரிந்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட சிகரெட் பைக்கட் மூட்டைகளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 லட்சம் இந்திய ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் வாகனத்தை செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
