முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27) அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், 2022இல் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர பிணையில் செல்வதற்க்கு அனுமதி வழங்கி உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி சந்தேகநபர் தேசபந்து தென்னகோனை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
அத்துடன் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் சந்தேகநபருக்கு மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
அழைக்கப்படும் போதெல்லாம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு உதவ வேண்டும் என்றும், அத்தகைய அழைப்பைத் தவிர்க்கும் பட்சத்தில், பிணை இரத்து செய்யப்பட்டு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
