இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணையை அமல்படுத்த தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இது குறித்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவிக்கையில்,
அரச மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணை என்பது புதிய கருத்து அல்ல என்றும், சில மாகாணங்களில் இந்த திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நேர அட்டவணை தற்போது தென் மாகாணத்தில் செயல்பாட்டில் உள்ளதாகவும், அண்மையில் புத்தளம் (A5) வழித்தடத்திற்கு நீட்டிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணையை செயல்படுத்துவது இலங்கை போக்குவரத்து சேவையை பலவீனப்படுத்தாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் செயல்பாடுகளை வலுப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே நிதி ஒதுக்கியுள்ளதாகவும், வரவிருக்கும் வரவுசெலவு திட்டத்தில் மேலும் ஒதுக்கீடுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், அது வெற்றிபெறாது எனவும், 90 சதவீத பேருந்துகளை இயக்க அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேருந்து செயல்பாடுகளை வலுக்கட்டாயமாக நாசப்படுத்தவோ அல்லது சீர்குலைக்கவோ முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து சேவைகள் இடையூறுகள் இல்லாமல் தொடரும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
